Wednesday 2 July 2014

உருப்படாத கல்வி முறையை மாத்துங்களேன் மம்மிஜி!



சமீபத்தில் என் உறவுக்காரரின் மகன்  ஐ சி எஸ் சி போர்டு முறையில் இருந்து ஸ்டேட் போர்டு முறைக்கு பதினோராம் வகுப்பில் சேர்ந்து இருந்தான் . சேர்ந்த ஒரு வாரமாய் அவன் வீட்டில் ஒரே சண்டையும், விவாதமும் தான்.

என்ன பிரச்சனை என கேட்டால், அந்த பையன் புலம்பல் ரொம்பவே யோசிக்க வைத்தது.

அவன் முதலில் பதினோராம் வகுப்பு தமிழ் புத்தகத்தை எடுத்து வைத்தான். இங்கே ஆரம்பிக்குது பிரச்சனை என்றான். நான் சிரித்து கொண்டே, என்ன  வழக்கம்போலே வரும் தமிழ் பீவரா ? என்றேன். நிச்சயமா இல்லை என்று தொடர்ந்தான்.

அவன் படித்த ஐ.சி.எஸ்.ஈ சிலபஸ்- ஸில்  எழுதுவதற்கு, யோசிப்பதற்கு நிறைய சுதந்திரம் இருந்தது , தமிழ் பாடம் உட்பட என்றான்...

நான் ஆச்சரிய மானேன். தொடர்ந்து கூறினான், அவன் பத்தாம் வகுப்பில் மூன்று நாவல்கள் மட்டுமே படிப்பு. எந்த இலக்கணமும், மனப்பாடமும், செய்யுளும்,உரைநடையும் எதுவும் இல்லை என்றான்.முழுக்க, முழுக்க எளிய எழுத்து நடைக்கும் ,கற்பனை திறனுக்கும் மட்டுமே மதிப்பெண்கள் ...

நான் சிறிது யோசனையுடன், அப்போ, இதெல்லாம் தப்புன்னு சொல்றயானு  கேட்டேன்..

அதற்கு அவன் சொன்னது:

1.தப்பா, சரியானு தெரியலை , ஆனால், இந்த மனப்பாட செய்யுளும், அதன் தெளிவுரையும் ,இலக்கணமும் என் நடை முறை வாழ்வில் எப்படி உதவும் நு நினைக்கிறேங்க...??

2. என் தாய்மொழியை பேசத்தெரியும், எளிமையாய் எழுதவும் தெரியும், என் சமூக வாழ்க்கையில் இந்த செய்யுளுக்கு வேலை தான் என்ன? மாணிக்க வாசகர் எழுதியதை நான் படிச்சு மார்க் வாங்கி என்ன பண்ண போறேன்?? 

3.இந்த வினை எச்சமும், உயிரளபடையும் தெரிஞ்சு நான் என்ன பண்ண போறேன்?


இந்த சிலபஸ் எனக்கு எந்த வகையில் பிரயோஜனப்படும் நு கேட்கிறான் .

தொடர்ந்து அவன் சொன்னது ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. அவனுடன் பத்தாம் வகுப்பில் அந்த  சிலபஸ் இல் படித்த மற்ற மாணவர்கள் எல்லாம் அங்கே தமிழ் பாடம் எடுத்து விட்டு, இந்த போர்டு க்கு வந்து இதை எல்லாம் பார்த்து மிரண்டு இவனை தவிர அனைவரும் பிரெஞ்சு பாடம் எடுக்க மாறிட்டாங்கனு சொன்னான்.

சரிடா...அதுக்கு ஏன் இங்கே  உன் வீட்டிலும் சண்டை போடுற? 

ம்ம்..பிரெஞ்சு   நானும்  மாறத்தான் ...

ஓ..அப்போ மாற வேண்டியது தானே...

அட...அப்பா சொல்றார்...தமிழ் இருந்தால்  தான் அரசாங்க வேலை கிடைப்பது ஈஸியாம் ...

அப்போ  தமிழ் உனக்கு பிடிக்கலை...அப்படி தானே  ...

நிச்சயமா இல்லை...தமிழ் ரொம்ப பிடிச்சிருக்கு...தமிழில் பத்தாம் வகுப்பில் நான் தான் பள்ளியில் முதல் இடம்...ஆனால் தமிழ்நாடு போர்டு இல் இருக்கும் இந்த திணிப்பு, உதவாத தமிழ் பாடத்திட்டம் சுத்தமா பிடிக்கலை....அதான்...

ம்ம்....எனக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை...

நிறைய குழப்பத்தோடும்,யோசனையோடும் வெளியே வருகிறேன்...தமிழ்நாட்டு முதல்வர் மம்மியும் இதை யோசிக்கும் காலம் வரட்டும்...

Monday 30 June 2014

ப்ளீஸ்.."பொன்னியின் செல்வன் "மேடை நாடகமாய் போடாதிங்கப்பா:-(




கல்கியின் 'பொன்னியின் செல்வன்'  ஒரு அமர காவியம். இந்த காவியத்தை படித்த ரசிக கண்மணிகள் நிச்சயம்  வந்திய தேவனையும், அருள்மொழி வர்மனையும், குந்தவையையும் ,பூங்குழலியையும் ,நந்தினியையும் தங்கள் மனதிற்குள் தினுசு தினுசாய் கற்பனை பண்ணி வைத்திருப்பார்கள்.

அப்படியே நானும் கற்பனை பண்ணி வைத்திருக்கிறேன். அறுபது வருட பழமையான வரலாற்று காவியத்தை மேடையில் காட்சி படுத்துதல் வெற்றி தருமா....??

சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் மேடை ஏற்றிய பொ .செ  வை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ரசிச்சு...ருசிச்சு படித்த எந்த ஒரு பொ .செ வாசகனுக்கும் பார்த்த அனுபவம் ,ஏமாற்றமாய் இருந்திருக்கும்னு தான் தோணுது.

மேடை நாடகத்தில் என்ன சிக்கல்?

1) பொன்னியின் செல்வனில் உள்ள பெரிய பலமே, கல்கி விவரித்த கதாபாத்திரங்களின் வருணனைகள்,சம்பவங்கள் நடக்கும் இடங்களின் காட்சிகள் எல்லாம் பக்காவாக இருக்கும். 

இலங்கை பற்றி விவரித்தால் அப்படியே நாம் அந்த புத்த சிலை பக்கத்தில் நின்று  பார்க்கும் பீல், இலங்கை கடலில் இருந்து கப்பலில் வரும் வந்திய தேவனை அருள்மொழி காப்பாத்தும் காட்சியின் பீல், சூடாமணி விகாரத்தில் இருந்து வெள்ளத்தால் தப்பிசெல்லும் காட்சியின் பீல் , கதாபாத்திரங்களின் கூடவே பயணிக்கும் உணர்வே  கிடைக்கும். கோடியக்கரை தீவு காட்சிகள் எல்லாம் படிக்க படிக்க திகட்டாதவை. ஒரு திரில்லர் படம் பார்த்த உணர்வு கிடைக்கும் அந்த இடத்தின் காட்சி அமைப்பை அவர் வருணித்த விதம்.

ஒரு வரலாற்று கதையினை சுவையாக்குவது  முதலில் அந்த இடத்தின் காட்சி அமைப்புகள், அடுத்து கதா பாத்திரத்தின் தோற்ற விவரிப்புகள்.இந்த அடிப்படை விஷயங்கள் மேடையில் போடப்படும் அமெச்சூர் நாடகத்தில் , கட்டாயமாக கொண்டு வர வாய்ப்பே இல்லை.

கோடியக்கரை என்று காட்ட, மேடையில் ரெண்டு வைக்கோல் கட்டுகளை நிறுத்தி வைத்ததில் சப்பென்று மட்டுமே இருந்தது...நொந்து விட்டேன்...:-(

2. அடுத்து பொ .செ வின் பலம் மற்றும் சுவாரஸ்யம் , "காதல்".

வந்திய தேவன்-குந்தவை காதல், பூங்குழலியின் காதல், சேந்தன் அமுதன் காதல், வானதியின் காதல், நந்தினி-ஆதித்த கரிகாலன் காதல், மந்தாகினி-சுந்தர சோழன் காதல்,பழுவேட்டையாரின் நந்தினி மீதான காதல், மணிமேகலையின் காதல் ......

நான் பார்த்த மேடை நாடகத்தில் இதில் ஒரு காதல் கூட சொல்ல படவில்லை.(கொஞ்சூண்டு குந்தவை-வந்திய தேவன் மட்டும்) உணர்த்தவும் முடியவில்லை. அது தான் கதையின் ஜீவன் ...

3.பினாகபாணி முதல் சம்புவராயர் வரை ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். இது எதுவும் மேடை நாடகத்தில் உணர வைக்கவே முடியவில்லை.

4. மணிமேகலை,பினாகபாணி எல்லாம் இதில் வரவே இல்லை:-(

5.அதிலும் சில கதாபாத்திரங்கள் எல்லாம் கல்கியின் வருணனையில் வேறு மாதிரி யோசித்து வைத்திருப்போம். ஆனால் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ஒரு தோற்றத்தில் அவர்களை பார்க்கும்போது, சத்தியமா கொடுமையாக  இருந்தது :-(

5.ஜஸ்ட் மூனரை மணிநேர  மேடை நாடக சிக்கல் இருந்தாலும் மொத்தமாய் யோசிக்கும்போது, என்னவோ  பெரிய ஏமாற்றமே...

6.நாடக முயற்சிக்கு என் பாராட்டுகள் ஒரு பக்கம் இருந்தாலும், ப்ளீஸ்...இந்த ஏரியாவை விட்டுடுங்கன்னு தான் மனசுக்குள் தோணிச்சு...



வேறு எப்படி நாங்க பொ .செ வை பார்க்க முடியும்?

** மூனரை வருஷம் எழுதியதை மூனரை மணிக்குள் கொண்டு வரும் ரிஸ்க் ஐ விட்டுட்டு...யாராவது இதை நீண்ட சீரியல் ஆ எடுக்க ஏன் முயற்சி பண்ண கூடாது?(யாரும் திரைப்படமா எதுவும் எடுத்து தொலைக்க கூடாது...:-( )

** மகாபாரதம்,ராமாயணம் தொடர் மாதிரி ஏன் இதற்கும் முயற்சி எடுக்க கூடாது?(இயக்குனர் ஷங்கர் :உங்கள் கவனத்துக்கு)

** அட்லீஸ்ட் அனிமேஷன்லாவது எடுங்கப்பா...உங்களுக்கு புண்ணியமா போகும்...

Tuesday 1 April 2014

தெனாலிராமன்- வடிவேலு அண்ணே !! சூதானமா இரு...!!

ஆயிரம் சந்தானம்,சூரிக்கள் ,பவர் ஸ்டார்கள் வந்தாலும் வைகை புயல் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது , சில ஆண்டுகள் வடிவேலு நடிக்கவில்லை என்றாலும், வடிவேலுவை "மிஸ்" பண்ணும் உணர்வை ,நகைச்சுவை விரும்பும் ஒவ்வொரு தமிழ் ரசிகனும் ஒத்து கொள்வான்.

அரசியல் அட்ராசிட்டி யில் தொலைந்து போன வைகை புயல் ,நெடுநாள் கழித்து ,"ஜகஜல புஜபல தெனாலிராமன் "என்ற பெயர் மாற்றப்பட்டு, தெனாலி ராமனாக களத்தில் குதிக்கும் நமது வண்டு முருகனின் ரீ-என்ட்ரி..

ஒரு வழியாய் ஏப்ரல் 27- இல் படத்தின் ட்ரைலேர் வெளியிடப்பட்டு விட்டது.


தெனாலி ராமனில் ட்ரைலர் பார்த்தவரை வழக்கமான வடிவேலு பாணி கிச்சு மூச்சு எதுவும் கண்களை அகல விரித்துப்பார்த்தும் கண்டிலேன்

சீரியஸான வீர வசனங்களும், மீனாட்சி தீக்ஷித் உடன் காதல் டூயட்டும் பார்த்த பிறகு கொஞ்சம் நெஞ்சம் தகிர்..பகீர்  ன்னு தான் இருக்கு..இதை செய்ய வைகை புயல் எதற்கு...??!!!



எந்த ஒரு ரசிகனும், வடிவேலுவிடம் எஸ்.எஸ்.ஆர் போல வீர வசனமோ, கமல் போல சொட்ட சொட்ட காதலோ, வாத்தியார் போல அனல் பறக்கும் கத்தி சண்டையோ சத்தியமாய் எதிர்பார்க்க மாட்டான்.

இம்சை அரசனில் கூட புலிகேசியை ரசித்த கண்களுக்கு, உக்கிரபுத்திரன் என்றுமே சகிக்கவில்லை.



என்றும் மனதில் நீங்காத இடம் பிடித்த "சூனா பானா "வையோ, "அப்ரசண்டிகளா" நேசமநியோ, www .பிச்சுமணி.com "பிச்சுவோ,சூப்பர் டூப்பர் "கைப்புள்ளையோ ", புல்லட் பாண்டியோ, 'சச்சின்' அய்யாசாமியோ, 'சுமோ' சுண்டிமோதிரமோ ,வெடி முத்துவோ, 'சுருதி வா' சங்கி மங்கி யோ ...இதுவாகத்தான் வைகை புயல் இருப்பது ரசிகனுக்கு எப்பொழுதும் வசீகரம்.




எவ்வளவோ போராட்டங்களை சந்தித்து, மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பும் வடிவேலு மிகவும் கவனமுடனே இருப்பார் என நம்புவோம்.படம் வந்த பிறகு ஒவ்வொரு வடிவேலு ரசிகனையும் திருப்தி படுத்துமானு பார்க்கலாம்.

எனி வே ,என்கவுண்டர் ஏகாம்பரமே !! வெல்கம் பேக் தல..:-)))

Friday 28 February 2014

ஐ சப்போர்ட் நாகநந்தி:-) # சிவகாமியின் சபதம்




ஒரு வழியாய் சி.ச வை படித்து முடித்தாயிற்று .கல்கியின் ரெண்டு புதினங்கள் நான் படித்தவரை...பூங்குழலியின் காதல் தோல்வி,நாக நந்தியின் காதல் தோல்வியை ஒப்பிட்டு பார்க்க முயற்சிக்கிறேன்..

கல்கி உருவாக்கிய காதல் கதாபாத்திரங்களில் ஊடுருவி பார்த்தால் , ஒரு பிடிவாதம்,வெறித்தனமான அன்பு, நிறைய ஈகோ, த்யாகம் இன்னபிற அளவிட முடியாத அழகியல் சார்ந்த ரீதியில் கலந்து இருக்கும்.



பொன்னியின் செல்வனில் பூங்குழலியின் காதல் செம தோரணை என்றால்,வானதியின் காதல் மென்மையான காற்று லேசா தடவி தடவி செல்ற இதம்..

நந்தினியை பத்தி தனியாவே ஒரு பதிவில் பார்ப்போம்...



ஓ .கே ...கம்மிங் டு தி பாயிண்ட் .ஆரம்பத்தில் இருந்தே சிவகாமியின் கதாபாத்திரத்தில் ஒரு நிலையற்ற தன்மையை புகுத்த முயற்சி செஞ்சுருக்காரோ  கல்கி னு  தோணுது. எப்படியும் காதல் கை கூட போவதில்லைக்கு ஜஸ்டிபை :-) பண்ணவான்னு  தெரியல..:-)

நாகநந்தியின் காதல் ஒசத்தி தானே?

மாமல்லன் ஒரு கட்டத்தில் தந்தை கட்டளை,பதவி,சிவகாமி வாதாபியில் இருந்து வர மறுத்தது ,அவளின் தொடர்ச்சியான பிடிவாதம் இவை எல்லாம் அவன் காதலை அசைத்தது ஒரு பக்கம் என்றால்..

நாகநந்தி...ஆயிரம் குரோதம்,வெறி,கள்ளத்தனம், நிரம்பியவனாக  இருந்தாலும், சிவகாமியின் காதலுக்காக எதையும் இழக்க துணியும்(இறுதியில் வாதாபியை காட்டி கொடுக்கும் வரை,அதனால் தன தம்பி புலிகேசி இறந்த பின்பும் கூட) தான் சொல்லும் மந்திரம் சிவகாமியை தவிர வேறு ஒன்றும் இல்லை என்ற மனபாங்குக்கே ஐ சப்போர்ட் நாகநந்தி:-)

காதலின் அடிப்படைக்கு தான் ரசிக்கும் கலையை எடுத்து கூறும் நேர்த்திக்கு... ஐ சப்போர்ட் நாகநந்தி:-)

சிவகாமியின் உருவத்தை மனம் நோகும் வகையில் அஜந்தா குகையில் வரைந்த சித்திரக்காரனை கொல்லும் ஆக்ரோஷத்தில் தெரியுது வெறிப்பிடித்த காதல்... ஐ சப்போர்ட் நாகநந்தி:-)

பதவியும் வேண்டாம்.மதமும் வேண்டாம், சமூகமும் வேண்டாம்...சிவகாமி மட்டும் போதும்...கெஞ்சும் அந்த கள்ள பிட்சுவின் லவ்க்கு... ஐ சப்போர்ட் நாகநந்தி:-)

இறுதியில் தான் பரஞ்சோதியால் சிறைபட்ட பிறகு கூட சிவகாமியின் மேல் கத்தி வீசியதற்கு அவர் சொல்லும் காரணத்தில் ஊறி ஊறி வழியுது லவ் ஒ லவ்... ஐ சப்போர்ட் நாகநந்தி:-)

கடைசி வரை தன்னை காம்ப்ரமைஸ் பண்ணிக்கவே பண்ணிக்காத ..காதலில் உறுதியுடன் இருந்த நாகநந்தி லவ் ஏ லவ்...

மாமல்லன் ,பூங்குழலி ,நந்தினி,சிவகாமி எல்லாரும் சூழ்நிலை பொறுத்து மனத்தை மாற்றி கொண்டாலும்...கடைசி வரை போராடிய "தில்" நாகநந்தி... 



 ஐ சப்போர்ட் யூ மேன் ...அபிராமி...அபிராமி! சிவகாமி..சிவகாமி!! :-)


Friday 18 October 2013

பெற்றோர்கள் கவனத்திற்கு!



சமீப காலமாக  கவலை தரும் விஷயமாக  செய்திகளில் அடிபடுவது மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த நிகழ்வுகளை.

இருபது வருடங்கள் முன்னோக்கி போனால் இருந்த கலாச்சாரத்திற்கும், தற்போது நிலவும் சூழலையும் ஒப்புமைபடுத்தி புலம்ப தொடங்கினால் வேஸ்ட் தான்..

80 களின் காலங்களையோ, 2013 களின் காலங்களையோ வகைப்படுத்தினால், கல்வி முதல் தொழிநுட்பம்  வரை அடைந்த சமீபகால பயன்களையும் ஏற்றுகொள்ள தான் வேண்டும்.

இந்த கால குழந்தைகள் என்ற நிஜங்களை உணரா  பெற்றோர்களே நீங்களும் சில விஷயங்களில் அப்டேட் ஆக யோசித்தால் தான் என்ன?

பெற்றோர்களே.. எனக்கு தெரிந்த சில யோசனைகள் :

1."அந்த காலத்தில நாங்கலாம் .." -னு ஆரம்பிக்கும் தர்க்கங்களை முதலில் விட்டொழித்து விடுங்கள். அந்த காலம் வேறு, இந்த காலம் வேறு. அந்த காலத்தில் தூரதர்ஷன் டிவி,ராணி காமிக்ஸ்,அம்புலிமாமா  தவிர பெருசாய் எந்த எக்ஸ்போஷரும்  இல்லை அப்படிங்கிற நிஜம் பெற்றோருக்கு இருக்கட்டும்.

2.பிடிவாதம் என் பிள்ளைக்கு ஜாஸ்தி என்று புலம்பும் பெற்றோர்களே! தவறு உங்களிடம் மட்டுமே உள்ளது. உங்கள் தலைமுறையில் வீட்டுக்கு மூணு,நாலு குழந்தைகள் இருக்கும். அவசரமாய் பக்கத்துக்கு வீட்டில் ஊருக்கு போனால் கூட உங்கள் வீட்டில் அந்த குழந்தைகளை  விட்டு போன  காலம் அது. அதை தவிர உங்கள் வீட்டில் குறைந்தது 3 உடன்பிறப்புகளாவது இருக்கும்.ஸோ ,பகிர்ந்து கொள்ளல்,பொறுத்து போகுதல்,சூழ்நிலைக்கு தகுந்து,புரிந்து கொள்ளும் மனப்பாங்கு என்ற இந்த மாதிரி விஷயங்கள் அழகாய் அந்த வயதில் கிடைத்து விடும்.

ஆனால், தற்காலத்தில் பெரும்பாலும், வீட்டுக்கு ஒண்ணே ஒண்ணு ,கண்ணே கண்ணு தியரியில் குழந்தை எண்ணிக்கை. பக்கத்து வீடுகளிலும் இதே தியரி:-) .  விளைவு, பகிர்ந்து கொள்ளல்,பொறுமை, அனுசரித்து போகும் மனப்பாங்கு -ன்னு எதுவும் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகிறது..அப்புறம் பிடிவாதம் வராமல் என்னத்தை வருமாம்?

3.இந்த கால பெற்றோர்கள் பெரும்பாலோருக்கு உள்ள பிரச்சனையே ..சமூக போலி கெளரவம்.. பக்கத்து வீட்டு பிள்ளை கராத்தே கிளாஸ் போகுதா, ரைட் நாம ஏன் குங்பு கிளாஸ் அனுப்பக்கூடாதுன்னு யோசிக்கும் புத்தி, அந்த கிளாஸ் குழந்தைக்கு பிடிச்சிருக்கா...அதில் ஆர்வமா போகிறானா அப்டின்னு யோசிக்கிறதை விட்டுவிடுகிறது.

ஆர்வம் இருந்து போனால் சரி, இல்லையா விட்டு விடுங்கள்..நீங்களே சில கலைகளை சொல்லி கொடுக்கலாம்...என்ன கலைன்னு கேட்கிறீங்களா?

1.உடைகளை எப்படி ஷெல்ப்/வார்ட் ரோப் -இல் இருந்து எடுப்பது என்று செய்து காண்பிக்கலாம்.இந்தப் பழக்கம் அலமாரியை கலைத்து விடும் செயலை நிறுத்திவிடும்.

2.சாக்ஸ் -ஐ எப்படி சுருங்காமல் மாட்டலாம் என்று என்று செய்து காண்பிக்கலாம்.

3.பாதுகாப்பாய் அயன் செய்வதை டெமோ செய்து காண்பிக்கலாம்.

4.வீட்டில் ஒட்டடை அடிக்க பழகிக்கொடுக்கலாம்..இது அக்குழந்தைக்கு தான் வசிக்கும் இடத்தை சுத்தமாய் எப்போதும் வைத்து இருக்கும் மனநிலையை உருவாக்கும்.

5.சின்ன சின்ன ஈசி சமையல் முறைகளை கற்றுக்கொடுக்கலாம்.(பழங்களை வெட்டி போட்டு ப்ரூட் சாலட்,ஆம்லேட்ஸ் ,சான்ட்விச்,தோசை ஊத்த,)இது அக்குழந்தைக்கு பின்னாளில் வெளி ஊர்/வெளிநாடுகளில் வேலையின் காரணமாய் தனித்து வாழும்போது பெரிதும் உதவும்.

6.ஏன் கோலம் போட,.வீட்டை சுத்தமாய் பெருக்க கூட சொல்லித்தரலாம்.

அட இதெல்லாம் விடுங்க. என் பிள்ளை சதா கம்ப்யூட்டர் ,பிஎஸ்பி ன்னு கதியா கிடக்கிறானே என்ன பண்ணி தொலைய ன்னு புலம்பாதிங்க..அதுக்கும் வழி இருக்கு...படிக்கும் ஹாபிட் ஐ வளர்த்து விட பாருங்க...அப்படி இல்லையா, நீங்களே ஒரு சிறந்த கதை சொல்லியாக மாறலாம்...அது அவனுக்கு பிடிச்ச டாபிக் ல இருந்தே ஆரம்பிங்க..அதுக்கு முதலில் உங்களை அப்டேட் பண்ணிக்கோங்க.

7.அருகில் இருக்கும் லைபிரரிக்கு ஜஸ்ட் ரெண்டு மூணு தடவை கூட்டி போங்க,ஏதாவது சப்ஜெக்ட் சொல்லி, ஜஸ்ட் புக் தேடி தர சொல்லுங்க..அவன் படிக்காட்டியும் பரவாயில்லை.

ஒரு கதையை ரொம்ப அற்புதமா அவன் விரும்பும் வண்ணம் பாதி சொல்லிருங்க.மீதியை அந்த புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்லுங்க.ஆர்வகோளாறில் புத்தகத்தை கட்டாயம் படிப்பான்...அதில் படிக்கும் ஆர்வம் படிப்படியாய் வர வாய்ப்பிருக்கு.

8.உங்கள் குழந்தைக்கு கிடைக்கும் அதிகப்படி தனிமை தான் அவனை கெட்டு போகும் உந்துதலை தருகிறது. அவனை அவன் பிரயோஜனபட விரும்பும் வண்ணம் என்கேஜ்ட் -ஆ வைங்க.

9.காலையில் எந்திரிச்சவுடன் படி,படின்னு ஆரம்பிக்காதிங்க..யோகா பண்ணுனு அனத்தாதிங்க..சிறிது அவனுடன் வெளியே பேசிட்டே நடந்துட்டு வாங்க, காக்கைக்கு உணவு வைக்க சொல்லுங்க, தோட்டத்து பூக்களை பறிச்சுட்டு வர சொல்லுங்க..இப்போ அவனே படிப்பான்.

10.எல்லாத்தையும் மீறி,அவனை எழுப்பிவிட்டு நீங்க தூங்காதிங்க..அவனை படிக்க சொல்லிட்டு நீங்க டிவி பார்க்காதிங்க.உங்கள் குழந்தைக்கு இந்த உலகில் கிடைக்கும் முதல் இன்ஸ்பிரேஷன் பெற்றோராகிய நீங்கள் மட்டுமே. அந்த எண்ணம் எப்பொழுதும் மனதில் இருக்கட்டும்.

11.படிப்பு,ட்யூஷன் மட்டுமே அவன் வாழ்க்கை இல்லை. மளிகை சாமான் பட்டியல் எழுத வைங்க. அவனை கூட கூட்டி போயி அந்த பொருள்களை வாங்குங்க. காய் மார்கெட் கூட்டி போங்க..அவனையே காய் பொறுக்க வைங்க..நல்ல காய்,முத்தல் காய் இது என்று லேசாய் சுட்டி காமிங்க.

12.மிக முக்கியமாய் உங்கள் குழந்தைகளை  பாராட்ட பழகுங்கள். சின்ன விஷயமாய் இருந்தாலும் சரி..இது இன்னும் சிறப்பாய் பண்ண வேண்டும் என்ற ஆர்வத்தை அவனுக்கு  உண்டு பண்ணும். நீ எதுக்குமே லாயக்கில்லை போன்ற வார்த்தைகள் ஒரு கட்டத்தில் அவனுக்குள் தன்னம்பிக்கையை சுத்தமா காலி பண்ணிரும்.

13.எல்லா விஷயத்திலும் உங்கள் கருத்துகளையே திணிக்க முயலாதிர்கள்.அப்புறம் எந்த விஷயமும் அவன் ஒழுங்கா செய்யமாட்டான். 

14.டாக்டர்,இஞ்சினியர் படிப்பு தான் பேரு பெத்த படிப்பு என்ற மாயையை தூக்கி போடுங்க..சுயவேலை வாய்ப்பு பற்றி கூட பேசி நம்பிக்கை ஊட்டுங்கள்..

15.வருடத்திற்கு ஒரு 3 முறையாவது சொந்தங்களுடன்,நட்புகளுடன்  கூடுங்கள்.குழந்தைக்கு சமூக பொறுப்புகள் வளர இந்த கட்டமைப்பு மிக மிக அவசியம்.

16.வீட்டிற்கு யார் வந்தாலும், "வாங்க",நலமா ன்னு கேட்கும் பழக்கத்தை உங்கள் குழந்தைகளிடம் வளருங்கள்..பின்னாளில் இந்த அட்டிடூட் அவன் அலுவலக சூழலில் அவனுக்கென்ற ரசிக கூட்டத்தையே உருவாக்கும்.



பெற்றோர்களே! பூக்களை மென்மையாக ஹான்டில் பண்ணுவது தான் முறை. குழந்தைகள் பூக்கள் மாதிரி..புரிந்து கொண்டு நடந்தால் சரி.

Thursday 17 October 2013

இதுதாம்லே படம்!!



யூ ட்யூப் தேடலில் சிக்கிய ஒரு கொரியன் படம் "ஹலோ கோஸ்ட்-2010" (Hello Ghost -2010)

பெரும்பாலும் பேய்,பிசாசுங்கிற  தலைப்பில் வரும் நம்மூரு படங்களில் எல்லாம் பழிக்கு பழி ஸ்டீரியோ டைப் தான்.

வெள்ளை கவுனில் ஒரு பேய் ,கையில் மெழுகு வர்த்தி ஏந்தி , நடந்து வந்து ஒவ்வொரு ஆளையா போட்டு தள்ளப்போகுது, மொட்டை மாடி உச்சியில் இருந்து தள்ளி விட்டு டிராகுலா பல்லோட சிரிக்கப்போகுது அப்படிங்கிற மாமூல் பேய் பட எதிர்பார்ப்பில் தான் இந்த படத்தை பார்க்க ஆரம்பிக்கும்போது...ஆனால்,,,

முற்றிலும் என் எதிர்பார்ப்புகளை(?!) பொய்யாக்கி, நகைச்சுவையுடன் பேய்களை  உலாவ விட்டு, படத்தின் இறுதியில் தேம்பி தேம்பி நம்மை அழவிட்ட திரைக்கதைக்கு செம சபாஷ்.

விரக்தி நிலையில் இருக்கும் கதாநாயகன் ஒவ்வொரு முறையும் தற்கொலை முயற்சி செய்யும்போதும் பிழைத்து கொள்கிறான்.ஒரு கட்டத்தில் மனோதத்துவ முறையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும்போது  வினோத குணங்கள் கொண்ட சிலர் இவன் பார்வைக்கு தெரிகிறார்கள். எப்போதும் சிகரட் பிடித்து கொண்டே வம்புக்கு வரும் ஒரு குண்டு மனிதர், விடலை தனத்துடன் ஒரு கிழவர், எப்போதும் அழுது கொண்டே இருக்கும் ஒரு பெண்மணி, சுத்தி சுத்தி வரும் ஒரு சிறுவன்.

இவன் கண்களுக்கு மட்டுமே தெரியும் இம்மனிதர்கள் இவனை விட்டு செல்ல மறுக்கிறார்கள். தன்  தற்கொலை முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் இவர்களை எப்படி துரத்துவது என்று புரியாமல் தவிக்கும் ஹீரோவுக்கு பிறகு தான் தெரிகிறது இவர்கள் பேய்கள் என்று.

ஒரு மந்திரவாதியின் ஆலோசனை படி, அந்த பேய்களின் நீங்காத ஆசைகளை நிறைவேற்றி வைத்தால் விலகி விடுவார்கள் என்ற முடிவுக்கு பின், ஹீரோ அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறான்.இடையில் காதலும் வருகிறது. இந்த பேய்களின் நடவடிக்கையால் காதலுக்கும் இடையூறு வர, கோவத்தில் பேய்களை விரட்டி விடுகிறான்.

கடைசியில் தான் தெரிகிறது, அந்த சிகரட் பிடிக்கும் மனிதர் இவன் தந்தை என்றும் ,அந்த கிழவர் இவனின் ஆசை தாத்தா என்றும்,எப்போதும் அழுது கொண்டே இருக்கும் அந்த பெண் இவன் தாய் என்றும்,அந்த சிறுவன் இவன் அண்ணன் என்றும். சிறுவயதில் கார் விபத்தில் சிக்கி அனைவரும் உயிரை விட, நம் ஹீரோ மட்டுமே உயிர் பிழைத்து, அந்த அதிர்ச்சியில் இந்த நிகழ்வுகளையும் மறந்து விடுகிறான்.

தொலைந்து போன தன்  உறவு ஆவிகள் :-) என்ன ஆயின? மீண்டும்  ஹீரோ தற்கொலை முயற்சி செய்தானா ? காதல் என்னாச்சுன்னு எல்லாம் த்ரில்,நகைச்சுவை,செண்டிமெண்ட் கலந்து கட்டி ,அட்டகாசமான மேகிங்கில் படத்தை கொடுத்து இருக்கிறார்கள்.



ஹீரோவின் தற்கொலை முயற்சிகளோடு  படத்தின் ஆரம்பத்தை தொடர்ந்து, ஆஸ்பத்திரியில் நடக்கும் கூத்துகளில் காமடி களை கட்டுகிறது.இந்த மாதிரி பிசாசுகளின் அறிமுக காட்சிகளை எந்த உலக படமும் வைத்திருக்காது என்று நினைக்கிறேன்.

குறைந்த கதாபாத்திரங்களின் உளவியல் கூறுகள் ,அதன் வெளிப்பாடுகள் ,நகைச்சுவையோடு நம்மை உருக வைக்கின்றன.

படத்தின் இறுதி காட்சிகள் நம்மில் நீண்ட மௌனத்தையும், உருண்டு ஓடும் கண்ணீரையும் கொடுத்து விடுகிறது.


இந்த படத்தில் இம்ப்ரெஸ் ஆகி, Home alone ,Mrs .Doubtfire ,Harry Potter பட பிரபல  இயக்குனர் கிறிஸ் கொலம்பஸ் ,ஹலோ கோஸ்ட் படத்தின் உரிமையை வாங்கி ரீமேக் செய்ய போகிறார். அநேகமாய் பட வெளியீடு 2014 இருக்கலாம்.




Wednesday 16 October 2013

திரைஉலகில் பெண் இயக்குனர்கள் ஏன் வெற்றி பெறுவதில்லை?



ஆண்கள் கோலோச்சும் திரைஉலகில் பெண்கள் ஜொலிப்பது அத்தி பூத்த நிகழ்வு தான்.

குடும்ப கூட்டில் இருந்து கொண்டே/வெளியே வந்து, பொதுவெளியில் தன்னை ,தனித்துவமாய் நிருபிக்க எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு சவால்கள் அதிகம்.

அதில் எத்தனை பெண்கள் தான் செய்ய / சொல்ல நினைத்ததை திரையில்  செயல்படுத்துகிறார்கள் என்பது தான் யோசிக்க வேண்டிய விஷயம்.

தென்னிந்தியாவை பொருத்தவரை ஒரு பெண், இயக்குனர் ஆவது பெரிய விஷயம் என்றால், அதில் சக்சஸ் ஆகி தன்னை நிருபிப்பது மிக,மிகப்பெரிய விஷயம்.

கோலிவுட்டில், இடையில் இடையில் சில பெண் இயக்குனர்கள் வந்து தங்கள் இருப்பினை பதிவு செய்தாலும்...ஏன் தொடர்ந்து அவர்களால் படங்கள் செய்ய முடிவதில்லை?

பானுமதி முதல் சுஹாசினி,பிரியா,லக்ஷ்மி ராமகிருஷ்ணன்,ஜெயசித்ரா,ஐஸ்வர்யா,கிருத்திகா என்று பட்டியலை அடுக்கி கொண்டே சென்றாலும்....ஏதோ ஒரு தேக்கம் தொடர்ந்து கொண்டே இருக்க தான் காரணம் என்ன?

பொதுவாய் ஒரு சராசரி திரை ரசிகனிடம் குறையாய் சொல்லப்படும் 'இந்த பொம்பளைகளிடம் நகைச்சுவை உணர்வு கம்மி' என்று  தொடங்கும் அலட்சியம் 'ஏதோ ஒரு பொம்பளை இந்த படத்தை எடுத்திருக்காம்" மில் பஞ்ச் வைக்கிறது  ஒரு பெண் இயக்குனரின் தோல்வி .

கமர்சியல் ஹிட் கொடுக்க முடியாத பெண் இயக்குனர்கள் , எவ்வளவு  தான் தன் கதையில் மாயா ஜாலங்கள் புரிந்தாலும், அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியாத ஒரு நிலை வந்து விடுவதும் நிஜம்.

ஒரு பெண் இயக்குனரால் சில விஷயங்கள் காம்ப்ரமைஸ் பண்ண முடியாத காரணத்தினாலும், கமர்சியல் வேல்யூவை இழக்கும் அபாயத்தில் சிக்கி கொள்கிறார்.

1. தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத "அய்ட்டம் சாங்" கலாச்சாரத்தை ஒரு பெண் இயக்குனர் விரும்புவதில்லை.

2.டிரஸ் எக்ஸ்போஸ் ஐ ஊக்குவிப்பதில்லை.

3.மரபு விதிகளான அருவாள் சண்டைகளும்,ஜீப் சண்டைகளும் புகுத்த முடிவதில்லை.

இவ்வகை ரசனைகளை உள்ளடக்கி பி மற்றும் சி சென்டரில் படம் பார்க்க வரும் ரசிக கண்மணிகளை திருப்தி படுத்தாத பெண் இயக்குனர்கள் மண்ணை கவ்வுகிறார்கள். 

சில மரபு விதிகள் கையாலப்படும்போது அப்பெண் இயக்குனர் கழுவி, கழுவி ஊத்தபடுவார்.

கற்பனை வளங்களும்,மெல்லிய ரசனைகளும் தன்னுள்ளே அதிகமாய் வைத்திருக்கும் ஒரு பெண்ணால் நினைத்த அளவிற்கு அதை திரையில் கொண்டுவர முடிகிறதா என்றால் அதுவும் இல்லை, வியாபார காம்ப்ரமைசில் சிக்கும் மார்கெட் மேனியா அங்கே முன்னிலை படுத்தப்பட்டு, மற்ற எல்லாவையும் பின்னுக்கு தள்ளப்படுகிறது.

அதையெல்லாம் தவிர்த்து வெற்றி பெற போராடும் அந்த பெண் படைப்பாளிக்கு சமூக கட்டமைப்புகள் எந்த அளவுக்கு உதவுகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.

பல ஆண்டுகளாய் உதவி இயக்குனர்களாக  இருந்த பெண்களில் வெகு சிலரே இயக்குனர்களாய் வெளி வந்திருக்கிறார்கள்.

மற்றபடி துட்டு இருக்கும் சில சீமாட்டிகளே இப்போதெல்லாம் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சூழல்.

பெண்கள் இதிலும் டப் கொடுக்கும் காலம் விரைவில் வரட்டும். போட்டியின் பலனாய் திரை உலகம் மாறி உருப்பட்டால் சரி.