Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Tuesday, 1 April 2014

தெனாலிராமன்- வடிவேலு அண்ணே !! சூதானமா இரு...!!

ஆயிரம் சந்தானம்,சூரிக்கள் ,பவர் ஸ்டார்கள் வந்தாலும் வைகை புயல் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது , சில ஆண்டுகள் வடிவேலு நடிக்கவில்லை என்றாலும், வடிவேலுவை "மிஸ்" பண்ணும் உணர்வை ,நகைச்சுவை விரும்பும் ஒவ்வொரு தமிழ் ரசிகனும் ஒத்து கொள்வான்.

அரசியல் அட்ராசிட்டி யில் தொலைந்து போன வைகை புயல் ,நெடுநாள் கழித்து ,"ஜகஜல புஜபல தெனாலிராமன் "என்ற பெயர் மாற்றப்பட்டு, தெனாலி ராமனாக களத்தில் குதிக்கும் நமது வண்டு முருகனின் ரீ-என்ட்ரி..

ஒரு வழியாய் ஏப்ரல் 27- இல் படத்தின் ட்ரைலேர் வெளியிடப்பட்டு விட்டது.


தெனாலி ராமனில் ட்ரைலர் பார்த்தவரை வழக்கமான வடிவேலு பாணி கிச்சு மூச்சு எதுவும் கண்களை அகல விரித்துப்பார்த்தும் கண்டிலேன்

சீரியஸான வீர வசனங்களும், மீனாட்சி தீக்ஷித் உடன் காதல் டூயட்டும் பார்த்த பிறகு கொஞ்சம் நெஞ்சம் தகிர்..பகீர்  ன்னு தான் இருக்கு..இதை செய்ய வைகை புயல் எதற்கு...??!!!



எந்த ஒரு ரசிகனும், வடிவேலுவிடம் எஸ்.எஸ்.ஆர் போல வீர வசனமோ, கமல் போல சொட்ட சொட்ட காதலோ, வாத்தியார் போல அனல் பறக்கும் கத்தி சண்டையோ சத்தியமாய் எதிர்பார்க்க மாட்டான்.

இம்சை அரசனில் கூட புலிகேசியை ரசித்த கண்களுக்கு, உக்கிரபுத்திரன் என்றுமே சகிக்கவில்லை.



என்றும் மனதில் நீங்காத இடம் பிடித்த "சூனா பானா "வையோ, "அப்ரசண்டிகளா" நேசமநியோ, www .பிச்சுமணி.com "பிச்சுவோ,சூப்பர் டூப்பர் "கைப்புள்ளையோ ", புல்லட் பாண்டியோ, 'சச்சின்' அய்யாசாமியோ, 'சுமோ' சுண்டிமோதிரமோ ,வெடி முத்துவோ, 'சுருதி வா' சங்கி மங்கி யோ ...இதுவாகத்தான் வைகை புயல் இருப்பது ரசிகனுக்கு எப்பொழுதும் வசீகரம்.




எவ்வளவோ போராட்டங்களை சந்தித்து, மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பும் வடிவேலு மிகவும் கவனமுடனே இருப்பார் என நம்புவோம்.படம் வந்த பிறகு ஒவ்வொரு வடிவேலு ரசிகனையும் திருப்தி படுத்துமானு பார்க்கலாம்.

எனி வே ,என்கவுண்டர் ஏகாம்பரமே !! வெல்கம் பேக் தல..:-)))

Thursday, 17 October 2013

இதுதாம்லே படம்!!



யூ ட்யூப் தேடலில் சிக்கிய ஒரு கொரியன் படம் "ஹலோ கோஸ்ட்-2010" (Hello Ghost -2010)

பெரும்பாலும் பேய்,பிசாசுங்கிற  தலைப்பில் வரும் நம்மூரு படங்களில் எல்லாம் பழிக்கு பழி ஸ்டீரியோ டைப் தான்.

வெள்ளை கவுனில் ஒரு பேய் ,கையில் மெழுகு வர்த்தி ஏந்தி , நடந்து வந்து ஒவ்வொரு ஆளையா போட்டு தள்ளப்போகுது, மொட்டை மாடி உச்சியில் இருந்து தள்ளி விட்டு டிராகுலா பல்லோட சிரிக்கப்போகுது அப்படிங்கிற மாமூல் பேய் பட எதிர்பார்ப்பில் தான் இந்த படத்தை பார்க்க ஆரம்பிக்கும்போது...ஆனால்,,,

முற்றிலும் என் எதிர்பார்ப்புகளை(?!) பொய்யாக்கி, நகைச்சுவையுடன் பேய்களை  உலாவ விட்டு, படத்தின் இறுதியில் தேம்பி தேம்பி நம்மை அழவிட்ட திரைக்கதைக்கு செம சபாஷ்.

விரக்தி நிலையில் இருக்கும் கதாநாயகன் ஒவ்வொரு முறையும் தற்கொலை முயற்சி செய்யும்போதும் பிழைத்து கொள்கிறான்.ஒரு கட்டத்தில் மனோதத்துவ முறையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும்போது  வினோத குணங்கள் கொண்ட சிலர் இவன் பார்வைக்கு தெரிகிறார்கள். எப்போதும் சிகரட் பிடித்து கொண்டே வம்புக்கு வரும் ஒரு குண்டு மனிதர், விடலை தனத்துடன் ஒரு கிழவர், எப்போதும் அழுது கொண்டே இருக்கும் ஒரு பெண்மணி, சுத்தி சுத்தி வரும் ஒரு சிறுவன்.

இவன் கண்களுக்கு மட்டுமே தெரியும் இம்மனிதர்கள் இவனை விட்டு செல்ல மறுக்கிறார்கள். தன்  தற்கொலை முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் இவர்களை எப்படி துரத்துவது என்று புரியாமல் தவிக்கும் ஹீரோவுக்கு பிறகு தான் தெரிகிறது இவர்கள் பேய்கள் என்று.

ஒரு மந்திரவாதியின் ஆலோசனை படி, அந்த பேய்களின் நீங்காத ஆசைகளை நிறைவேற்றி வைத்தால் விலகி விடுவார்கள் என்ற முடிவுக்கு பின், ஹீரோ அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறான்.இடையில் காதலும் வருகிறது. இந்த பேய்களின் நடவடிக்கையால் காதலுக்கும் இடையூறு வர, கோவத்தில் பேய்களை விரட்டி விடுகிறான்.

கடைசியில் தான் தெரிகிறது, அந்த சிகரட் பிடிக்கும் மனிதர் இவன் தந்தை என்றும் ,அந்த கிழவர் இவனின் ஆசை தாத்தா என்றும்,எப்போதும் அழுது கொண்டே இருக்கும் அந்த பெண் இவன் தாய் என்றும்,அந்த சிறுவன் இவன் அண்ணன் என்றும். சிறுவயதில் கார் விபத்தில் சிக்கி அனைவரும் உயிரை விட, நம் ஹீரோ மட்டுமே உயிர் பிழைத்து, அந்த அதிர்ச்சியில் இந்த நிகழ்வுகளையும் மறந்து விடுகிறான்.

தொலைந்து போன தன்  உறவு ஆவிகள் :-) என்ன ஆயின? மீண்டும்  ஹீரோ தற்கொலை முயற்சி செய்தானா ? காதல் என்னாச்சுன்னு எல்லாம் த்ரில்,நகைச்சுவை,செண்டிமெண்ட் கலந்து கட்டி ,அட்டகாசமான மேகிங்கில் படத்தை கொடுத்து இருக்கிறார்கள்.



ஹீரோவின் தற்கொலை முயற்சிகளோடு  படத்தின் ஆரம்பத்தை தொடர்ந்து, ஆஸ்பத்திரியில் நடக்கும் கூத்துகளில் காமடி களை கட்டுகிறது.இந்த மாதிரி பிசாசுகளின் அறிமுக காட்சிகளை எந்த உலக படமும் வைத்திருக்காது என்று நினைக்கிறேன்.

குறைந்த கதாபாத்திரங்களின் உளவியல் கூறுகள் ,அதன் வெளிப்பாடுகள் ,நகைச்சுவையோடு நம்மை உருக வைக்கின்றன.

படத்தின் இறுதி காட்சிகள் நம்மில் நீண்ட மௌனத்தையும், உருண்டு ஓடும் கண்ணீரையும் கொடுத்து விடுகிறது.


இந்த படத்தில் இம்ப்ரெஸ் ஆகி, Home alone ,Mrs .Doubtfire ,Harry Potter பட பிரபல  இயக்குனர் கிறிஸ் கொலம்பஸ் ,ஹலோ கோஸ்ட் படத்தின் உரிமையை வாங்கி ரீமேக் செய்ய போகிறார். அநேகமாய் பட வெளியீடு 2014 இருக்கலாம்.




Wednesday, 16 October 2013

திரைஉலகில் பெண் இயக்குனர்கள் ஏன் வெற்றி பெறுவதில்லை?



ஆண்கள் கோலோச்சும் திரைஉலகில் பெண்கள் ஜொலிப்பது அத்தி பூத்த நிகழ்வு தான்.

குடும்ப கூட்டில் இருந்து கொண்டே/வெளியே வந்து, பொதுவெளியில் தன்னை ,தனித்துவமாய் நிருபிக்க எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு சவால்கள் அதிகம்.

அதில் எத்தனை பெண்கள் தான் செய்ய / சொல்ல நினைத்ததை திரையில்  செயல்படுத்துகிறார்கள் என்பது தான் யோசிக்க வேண்டிய விஷயம்.

தென்னிந்தியாவை பொருத்தவரை ஒரு பெண், இயக்குனர் ஆவது பெரிய விஷயம் என்றால், அதில் சக்சஸ் ஆகி தன்னை நிருபிப்பது மிக,மிகப்பெரிய விஷயம்.

கோலிவுட்டில், இடையில் இடையில் சில பெண் இயக்குனர்கள் வந்து தங்கள் இருப்பினை பதிவு செய்தாலும்...ஏன் தொடர்ந்து அவர்களால் படங்கள் செய்ய முடிவதில்லை?

பானுமதி முதல் சுஹாசினி,பிரியா,லக்ஷ்மி ராமகிருஷ்ணன்,ஜெயசித்ரா,ஐஸ்வர்யா,கிருத்திகா என்று பட்டியலை அடுக்கி கொண்டே சென்றாலும்....ஏதோ ஒரு தேக்கம் தொடர்ந்து கொண்டே இருக்க தான் காரணம் என்ன?

பொதுவாய் ஒரு சராசரி திரை ரசிகனிடம் குறையாய் சொல்லப்படும் 'இந்த பொம்பளைகளிடம் நகைச்சுவை உணர்வு கம்மி' என்று  தொடங்கும் அலட்சியம் 'ஏதோ ஒரு பொம்பளை இந்த படத்தை எடுத்திருக்காம்" மில் பஞ்ச் வைக்கிறது  ஒரு பெண் இயக்குனரின் தோல்வி .

கமர்சியல் ஹிட் கொடுக்க முடியாத பெண் இயக்குனர்கள் , எவ்வளவு  தான் தன் கதையில் மாயா ஜாலங்கள் புரிந்தாலும், அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியாத ஒரு நிலை வந்து விடுவதும் நிஜம்.

ஒரு பெண் இயக்குனரால் சில விஷயங்கள் காம்ப்ரமைஸ் பண்ண முடியாத காரணத்தினாலும், கமர்சியல் வேல்யூவை இழக்கும் அபாயத்தில் சிக்கி கொள்கிறார்.

1. தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத "அய்ட்டம் சாங்" கலாச்சாரத்தை ஒரு பெண் இயக்குனர் விரும்புவதில்லை.

2.டிரஸ் எக்ஸ்போஸ் ஐ ஊக்குவிப்பதில்லை.

3.மரபு விதிகளான அருவாள் சண்டைகளும்,ஜீப் சண்டைகளும் புகுத்த முடிவதில்லை.

இவ்வகை ரசனைகளை உள்ளடக்கி பி மற்றும் சி சென்டரில் படம் பார்க்க வரும் ரசிக கண்மணிகளை திருப்தி படுத்தாத பெண் இயக்குனர்கள் மண்ணை கவ்வுகிறார்கள். 

சில மரபு விதிகள் கையாலப்படும்போது அப்பெண் இயக்குனர் கழுவி, கழுவி ஊத்தபடுவார்.

கற்பனை வளங்களும்,மெல்லிய ரசனைகளும் தன்னுள்ளே அதிகமாய் வைத்திருக்கும் ஒரு பெண்ணால் நினைத்த அளவிற்கு அதை திரையில் கொண்டுவர முடிகிறதா என்றால் அதுவும் இல்லை, வியாபார காம்ப்ரமைசில் சிக்கும் மார்கெட் மேனியா அங்கே முன்னிலை படுத்தப்பட்டு, மற்ற எல்லாவையும் பின்னுக்கு தள்ளப்படுகிறது.

அதையெல்லாம் தவிர்த்து வெற்றி பெற போராடும் அந்த பெண் படைப்பாளிக்கு சமூக கட்டமைப்புகள் எந்த அளவுக்கு உதவுகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.

பல ஆண்டுகளாய் உதவி இயக்குனர்களாக  இருந்த பெண்களில் வெகு சிலரே இயக்குனர்களாய் வெளி வந்திருக்கிறார்கள்.

மற்றபடி துட்டு இருக்கும் சில சீமாட்டிகளே இப்போதெல்லாம் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சூழல்.

பெண்கள் இதிலும் டப் கொடுக்கும் காலம் விரைவில் வரட்டும். போட்டியின் பலனாய் திரை உலகம் மாறி உருப்பட்டால் சரி.