Monday 30 June 2014

ப்ளீஸ்.."பொன்னியின் செல்வன் "மேடை நாடகமாய் போடாதிங்கப்பா:-(




கல்கியின் 'பொன்னியின் செல்வன்'  ஒரு அமர காவியம். இந்த காவியத்தை படித்த ரசிக கண்மணிகள் நிச்சயம்  வந்திய தேவனையும், அருள்மொழி வர்மனையும், குந்தவையையும் ,பூங்குழலியையும் ,நந்தினியையும் தங்கள் மனதிற்குள் தினுசு தினுசாய் கற்பனை பண்ணி வைத்திருப்பார்கள்.

அப்படியே நானும் கற்பனை பண்ணி வைத்திருக்கிறேன். அறுபது வருட பழமையான வரலாற்று காவியத்தை மேடையில் காட்சி படுத்துதல் வெற்றி தருமா....??

சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் மேடை ஏற்றிய பொ .செ  வை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ரசிச்சு...ருசிச்சு படித்த எந்த ஒரு பொ .செ வாசகனுக்கும் பார்த்த அனுபவம் ,ஏமாற்றமாய் இருந்திருக்கும்னு தான் தோணுது.

மேடை நாடகத்தில் என்ன சிக்கல்?

1) பொன்னியின் செல்வனில் உள்ள பெரிய பலமே, கல்கி விவரித்த கதாபாத்திரங்களின் வருணனைகள்,சம்பவங்கள் நடக்கும் இடங்களின் காட்சிகள் எல்லாம் பக்காவாக இருக்கும். 

இலங்கை பற்றி விவரித்தால் அப்படியே நாம் அந்த புத்த சிலை பக்கத்தில் நின்று  பார்க்கும் பீல், இலங்கை கடலில் இருந்து கப்பலில் வரும் வந்திய தேவனை அருள்மொழி காப்பாத்தும் காட்சியின் பீல், சூடாமணி விகாரத்தில் இருந்து வெள்ளத்தால் தப்பிசெல்லும் காட்சியின் பீல் , கதாபாத்திரங்களின் கூடவே பயணிக்கும் உணர்வே  கிடைக்கும். கோடியக்கரை தீவு காட்சிகள் எல்லாம் படிக்க படிக்க திகட்டாதவை. ஒரு திரில்லர் படம் பார்த்த உணர்வு கிடைக்கும் அந்த இடத்தின் காட்சி அமைப்பை அவர் வருணித்த விதம்.

ஒரு வரலாற்று கதையினை சுவையாக்குவது  முதலில் அந்த இடத்தின் காட்சி அமைப்புகள், அடுத்து கதா பாத்திரத்தின் தோற்ற விவரிப்புகள்.இந்த அடிப்படை விஷயங்கள் மேடையில் போடப்படும் அமெச்சூர் நாடகத்தில் , கட்டாயமாக கொண்டு வர வாய்ப்பே இல்லை.

கோடியக்கரை என்று காட்ட, மேடையில் ரெண்டு வைக்கோல் கட்டுகளை நிறுத்தி வைத்ததில் சப்பென்று மட்டுமே இருந்தது...நொந்து விட்டேன்...:-(

2. அடுத்து பொ .செ வின் பலம் மற்றும் சுவாரஸ்யம் , "காதல்".

வந்திய தேவன்-குந்தவை காதல், பூங்குழலியின் காதல், சேந்தன் அமுதன் காதல், வானதியின் காதல், நந்தினி-ஆதித்த கரிகாலன் காதல், மந்தாகினி-சுந்தர சோழன் காதல்,பழுவேட்டையாரின் நந்தினி மீதான காதல், மணிமேகலையின் காதல் ......

நான் பார்த்த மேடை நாடகத்தில் இதில் ஒரு காதல் கூட சொல்ல படவில்லை.(கொஞ்சூண்டு குந்தவை-வந்திய தேவன் மட்டும்) உணர்த்தவும் முடியவில்லை. அது தான் கதையின் ஜீவன் ...

3.பினாகபாணி முதல் சம்புவராயர் வரை ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். இது எதுவும் மேடை நாடகத்தில் உணர வைக்கவே முடியவில்லை.

4. மணிமேகலை,பினாகபாணி எல்லாம் இதில் வரவே இல்லை:-(

5.அதிலும் சில கதாபாத்திரங்கள் எல்லாம் கல்கியின் வருணனையில் வேறு மாதிரி யோசித்து வைத்திருப்போம். ஆனால் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ஒரு தோற்றத்தில் அவர்களை பார்க்கும்போது, சத்தியமா கொடுமையாக  இருந்தது :-(

5.ஜஸ்ட் மூனரை மணிநேர  மேடை நாடக சிக்கல் இருந்தாலும் மொத்தமாய் யோசிக்கும்போது, என்னவோ  பெரிய ஏமாற்றமே...

6.நாடக முயற்சிக்கு என் பாராட்டுகள் ஒரு பக்கம் இருந்தாலும், ப்ளீஸ்...இந்த ஏரியாவை விட்டுடுங்கன்னு தான் மனசுக்குள் தோணிச்சு...



வேறு எப்படி நாங்க பொ .செ வை பார்க்க முடியும்?

** மூனரை வருஷம் எழுதியதை மூனரை மணிக்குள் கொண்டு வரும் ரிஸ்க் ஐ விட்டுட்டு...யாராவது இதை நீண்ட சீரியல் ஆ எடுக்க ஏன் முயற்சி பண்ண கூடாது?(யாரும் திரைப்படமா எதுவும் எடுத்து தொலைக்க கூடாது...:-( )

** மகாபாரதம்,ராமாயணம் தொடர் மாதிரி ஏன் இதற்கும் முயற்சி எடுக்க கூடாது?(இயக்குனர் ஷங்கர் :உங்கள் கவனத்துக்கு)

** அட்லீஸ்ட் அனிமேஷன்லாவது எடுங்கப்பா...உங்களுக்கு புண்ணியமா போகும்...