Friday 18 October 2013

பெற்றோர்கள் கவனத்திற்கு!



சமீப காலமாக  கவலை தரும் விஷயமாக  செய்திகளில் அடிபடுவது மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த நிகழ்வுகளை.

இருபது வருடங்கள் முன்னோக்கி போனால் இருந்த கலாச்சாரத்திற்கும், தற்போது நிலவும் சூழலையும் ஒப்புமைபடுத்தி புலம்ப தொடங்கினால் வேஸ்ட் தான்..

80 களின் காலங்களையோ, 2013 களின் காலங்களையோ வகைப்படுத்தினால், கல்வி முதல் தொழிநுட்பம்  வரை அடைந்த சமீபகால பயன்களையும் ஏற்றுகொள்ள தான் வேண்டும்.

இந்த கால குழந்தைகள் என்ற நிஜங்களை உணரா  பெற்றோர்களே நீங்களும் சில விஷயங்களில் அப்டேட் ஆக யோசித்தால் தான் என்ன?

பெற்றோர்களே.. எனக்கு தெரிந்த சில யோசனைகள் :

1."அந்த காலத்தில நாங்கலாம் .." -னு ஆரம்பிக்கும் தர்க்கங்களை முதலில் விட்டொழித்து விடுங்கள். அந்த காலம் வேறு, இந்த காலம் வேறு. அந்த காலத்தில் தூரதர்ஷன் டிவி,ராணி காமிக்ஸ்,அம்புலிமாமா  தவிர பெருசாய் எந்த எக்ஸ்போஷரும்  இல்லை அப்படிங்கிற நிஜம் பெற்றோருக்கு இருக்கட்டும்.

2.பிடிவாதம் என் பிள்ளைக்கு ஜாஸ்தி என்று புலம்பும் பெற்றோர்களே! தவறு உங்களிடம் மட்டுமே உள்ளது. உங்கள் தலைமுறையில் வீட்டுக்கு மூணு,நாலு குழந்தைகள் இருக்கும். அவசரமாய் பக்கத்துக்கு வீட்டில் ஊருக்கு போனால் கூட உங்கள் வீட்டில் அந்த குழந்தைகளை  விட்டு போன  காலம் அது. அதை தவிர உங்கள் வீட்டில் குறைந்தது 3 உடன்பிறப்புகளாவது இருக்கும்.ஸோ ,பகிர்ந்து கொள்ளல்,பொறுத்து போகுதல்,சூழ்நிலைக்கு தகுந்து,புரிந்து கொள்ளும் மனப்பாங்கு என்ற இந்த மாதிரி விஷயங்கள் அழகாய் அந்த வயதில் கிடைத்து விடும்.

ஆனால், தற்காலத்தில் பெரும்பாலும், வீட்டுக்கு ஒண்ணே ஒண்ணு ,கண்ணே கண்ணு தியரியில் குழந்தை எண்ணிக்கை. பக்கத்து வீடுகளிலும் இதே தியரி:-) .  விளைவு, பகிர்ந்து கொள்ளல்,பொறுமை, அனுசரித்து போகும் மனப்பாங்கு -ன்னு எதுவும் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகிறது..அப்புறம் பிடிவாதம் வராமல் என்னத்தை வருமாம்?

3.இந்த கால பெற்றோர்கள் பெரும்பாலோருக்கு உள்ள பிரச்சனையே ..சமூக போலி கெளரவம்.. பக்கத்து வீட்டு பிள்ளை கராத்தே கிளாஸ் போகுதா, ரைட் நாம ஏன் குங்பு கிளாஸ் அனுப்பக்கூடாதுன்னு யோசிக்கும் புத்தி, அந்த கிளாஸ் குழந்தைக்கு பிடிச்சிருக்கா...அதில் ஆர்வமா போகிறானா அப்டின்னு யோசிக்கிறதை விட்டுவிடுகிறது.

ஆர்வம் இருந்து போனால் சரி, இல்லையா விட்டு விடுங்கள்..நீங்களே சில கலைகளை சொல்லி கொடுக்கலாம்...என்ன கலைன்னு கேட்கிறீங்களா?

1.உடைகளை எப்படி ஷெல்ப்/வார்ட் ரோப் -இல் இருந்து எடுப்பது என்று செய்து காண்பிக்கலாம்.இந்தப் பழக்கம் அலமாரியை கலைத்து விடும் செயலை நிறுத்திவிடும்.

2.சாக்ஸ் -ஐ எப்படி சுருங்காமல் மாட்டலாம் என்று என்று செய்து காண்பிக்கலாம்.

3.பாதுகாப்பாய் அயன் செய்வதை டெமோ செய்து காண்பிக்கலாம்.

4.வீட்டில் ஒட்டடை அடிக்க பழகிக்கொடுக்கலாம்..இது அக்குழந்தைக்கு தான் வசிக்கும் இடத்தை சுத்தமாய் எப்போதும் வைத்து இருக்கும் மனநிலையை உருவாக்கும்.

5.சின்ன சின்ன ஈசி சமையல் முறைகளை கற்றுக்கொடுக்கலாம்.(பழங்களை வெட்டி போட்டு ப்ரூட் சாலட்,ஆம்லேட்ஸ் ,சான்ட்விச்,தோசை ஊத்த,)இது அக்குழந்தைக்கு பின்னாளில் வெளி ஊர்/வெளிநாடுகளில் வேலையின் காரணமாய் தனித்து வாழும்போது பெரிதும் உதவும்.

6.ஏன் கோலம் போட,.வீட்டை சுத்தமாய் பெருக்க கூட சொல்லித்தரலாம்.

அட இதெல்லாம் விடுங்க. என் பிள்ளை சதா கம்ப்யூட்டர் ,பிஎஸ்பி ன்னு கதியா கிடக்கிறானே என்ன பண்ணி தொலைய ன்னு புலம்பாதிங்க..அதுக்கும் வழி இருக்கு...படிக்கும் ஹாபிட் ஐ வளர்த்து விட பாருங்க...அப்படி இல்லையா, நீங்களே ஒரு சிறந்த கதை சொல்லியாக மாறலாம்...அது அவனுக்கு பிடிச்ச டாபிக் ல இருந்தே ஆரம்பிங்க..அதுக்கு முதலில் உங்களை அப்டேட் பண்ணிக்கோங்க.

7.அருகில் இருக்கும் லைபிரரிக்கு ஜஸ்ட் ரெண்டு மூணு தடவை கூட்டி போங்க,ஏதாவது சப்ஜெக்ட் சொல்லி, ஜஸ்ட் புக் தேடி தர சொல்லுங்க..அவன் படிக்காட்டியும் பரவாயில்லை.

ஒரு கதையை ரொம்ப அற்புதமா அவன் விரும்பும் வண்ணம் பாதி சொல்லிருங்க.மீதியை அந்த புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்லுங்க.ஆர்வகோளாறில் புத்தகத்தை கட்டாயம் படிப்பான்...அதில் படிக்கும் ஆர்வம் படிப்படியாய் வர வாய்ப்பிருக்கு.

8.உங்கள் குழந்தைக்கு கிடைக்கும் அதிகப்படி தனிமை தான் அவனை கெட்டு போகும் உந்துதலை தருகிறது. அவனை அவன் பிரயோஜனபட விரும்பும் வண்ணம் என்கேஜ்ட் -ஆ வைங்க.

9.காலையில் எந்திரிச்சவுடன் படி,படின்னு ஆரம்பிக்காதிங்க..யோகா பண்ணுனு அனத்தாதிங்க..சிறிது அவனுடன் வெளியே பேசிட்டே நடந்துட்டு வாங்க, காக்கைக்கு உணவு வைக்க சொல்லுங்க, தோட்டத்து பூக்களை பறிச்சுட்டு வர சொல்லுங்க..இப்போ அவனே படிப்பான்.

10.எல்லாத்தையும் மீறி,அவனை எழுப்பிவிட்டு நீங்க தூங்காதிங்க..அவனை படிக்க சொல்லிட்டு நீங்க டிவி பார்க்காதிங்க.உங்கள் குழந்தைக்கு இந்த உலகில் கிடைக்கும் முதல் இன்ஸ்பிரேஷன் பெற்றோராகிய நீங்கள் மட்டுமே. அந்த எண்ணம் எப்பொழுதும் மனதில் இருக்கட்டும்.

11.படிப்பு,ட்யூஷன் மட்டுமே அவன் வாழ்க்கை இல்லை. மளிகை சாமான் பட்டியல் எழுத வைங்க. அவனை கூட கூட்டி போயி அந்த பொருள்களை வாங்குங்க. காய் மார்கெட் கூட்டி போங்க..அவனையே காய் பொறுக்க வைங்க..நல்ல காய்,முத்தல் காய் இது என்று லேசாய் சுட்டி காமிங்க.

12.மிக முக்கியமாய் உங்கள் குழந்தைகளை  பாராட்ட பழகுங்கள். சின்ன விஷயமாய் இருந்தாலும் சரி..இது இன்னும் சிறப்பாய் பண்ண வேண்டும் என்ற ஆர்வத்தை அவனுக்கு  உண்டு பண்ணும். நீ எதுக்குமே லாயக்கில்லை போன்ற வார்த்தைகள் ஒரு கட்டத்தில் அவனுக்குள் தன்னம்பிக்கையை சுத்தமா காலி பண்ணிரும்.

13.எல்லா விஷயத்திலும் உங்கள் கருத்துகளையே திணிக்க முயலாதிர்கள்.அப்புறம் எந்த விஷயமும் அவன் ஒழுங்கா செய்யமாட்டான். 

14.டாக்டர்,இஞ்சினியர் படிப்பு தான் பேரு பெத்த படிப்பு என்ற மாயையை தூக்கி போடுங்க..சுயவேலை வாய்ப்பு பற்றி கூட பேசி நம்பிக்கை ஊட்டுங்கள்..

15.வருடத்திற்கு ஒரு 3 முறையாவது சொந்தங்களுடன்,நட்புகளுடன்  கூடுங்கள்.குழந்தைக்கு சமூக பொறுப்புகள் வளர இந்த கட்டமைப்பு மிக மிக அவசியம்.

16.வீட்டிற்கு யார் வந்தாலும், "வாங்க",நலமா ன்னு கேட்கும் பழக்கத்தை உங்கள் குழந்தைகளிடம் வளருங்கள்..பின்னாளில் இந்த அட்டிடூட் அவன் அலுவலக சூழலில் அவனுக்கென்ற ரசிக கூட்டத்தையே உருவாக்கும்.



பெற்றோர்களே! பூக்களை மென்மையாக ஹான்டில் பண்ணுவது தான் முறை. குழந்தைகள் பூக்கள் மாதிரி..புரிந்து கொண்டு நடந்தால் சரி.

2 comments:

  1. வணக்கம்
    பதிவு அருமைய உள்ளது பெற்றோர் கவனத்திற்கு குறிப்பிட்ட 16 கருத்துக்களும் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. pon ezhukkalal porikka vendiya padhivu. Kuzhandhaigalai kozhipannaiyil kozhiyai valarppadu pola valarkkum indraya otrai kuzhandai petrorukku thevayana katturai.

    ReplyDelete